26 Jul 2011

என்னைத் தொடக்கியவருக்கு ...

நா இது என்னோட அப்பாவ நெனச்சு எழுதுன கவித...எல்லாருக்குமே அப்பா ரொம்ப பெரிய விஷயம்... முன் மாதிரி ....எனக்கும் எங்க அப்பாஅப்டிதான்...இன்னிக்கு வரைக்கும் எந்த வித சோர்வும் இல்லாம என்ன தாங்குற என் அப்பாவுக்காக நா செய்ற சின்ன விஷயம் இந்த கவித ... Dedicated to my dad...love u pa...!


கண் மூடிக் கனவு கண்டு ...கண்டவுடன் கண் நனைத்துக்
கையிலெடுத்துக் ... கட்டியணைத்துக்
கண்மணி எனக் காதருகே
கத்தி முடி குறுகுறுக்கக் கண் திறந்து பார்க்கிறேன்
தூளியிலே நான் கிடக்க ... தூரத்திலே நீ இருக்க
ஆழியதன் முத்தெனவே ... அதிசயத்து நின்றிருக்க
விழி விரித்து வீசிய விந்தைச் சிரிப்பழகை ... கன்னக்
குழி நிறையக் குறையாப் புன்னகையுடன் ... உச்சி
முகர்ந்தென்னை முத்தமிட்டவன் நீ ...!

தத்தித் தத்தி நடை பழக ... தடுக்கித் தடுக்கித் தரையில் விழ
தாவி வந்தென்னைத் தன்னுடன் தான் அணைத்து
தட்டி விழுந்த தழும்புக்கெல்லாம் ... தடவித் தந்து தாலாட்டி
தன்னை மறந்து என்னுடனே உறங்கிப்போனவன் நீ ...!

இரவுத் தூக்கத்தை ....இன்னமும் இனிமையாக்க
இனிக்க இனிக்க ... இலக்கியம் பேசி
இன்னமும் எனக்கொரு  முன்னோடிஎன நடப்பவன் நீ...! 

வழுக்கி விழும் போதெல்லாம் ...வந்து நின்று வழி காட்டி
விழி  அழும் போதெல்லாம் வேண்டாமென்று துடைத்து விட்டு
அழியாத கனவாக ... அழகாக  நானிருக்க...
வழியெல்லாம் வலியோடு எனக்காக  எழிலிழந்து எதையும் ஏற்றவன் நீ...!

கண்ணாடி முன் நின்று நீ உனைப் பார்க்கும் போதெல்லாம்
முகத்தின் முன்னாடி உள்ளச் சுருக்கங்கள் எனைப் பார்த்து
                                                        சூசகமாய் சொல்கிறது
என்னடி ... பார்க்கிறாய் ... நாங்களெல்லாம்
உனக்காகத்தான் உருவாகினோம் என்று ...!

உடையவன் ஒருவனும் உன்னைப்போல் உள்ளத்தால் உயர்ந்திருக்க
அடையாதது ஒன்றுமில்லை... அர்த்தம் பெற்றுவிடும்
அத்தனையும் என் வாழ்வில் !!!

தடை ஏதுமில்லைத் தகப்பனே உன்னை தரிசிக்க
விடை ஏதுமில்லை ...விரும்பி நீ எனக்களிக்க
அத்தனையும் தந்து விட்டாய் ... அன்பொழுக எனைத் தழுவி
இத்தனை தானா நீ எனக்கு ...?
இல்லையில்லை ... இன்னமும் இருக்கிறது ...
இறைக்க இறைக்கக் குறையாது ...

எத்தனையோ எனக்குச் செய்த நீ ... என் வழி
அத்தனையும் என் முன் நடக்க வேண்டும்  ...
பித்தனைப்போல் என்னையே நினைத்துக்கொண்டிருக்கும்
உன்னையே சித்தமென்றிருக்க ... இனி வரும்
அத்தனைப் பிறவியிலும் ...உனக்கே நான் பிறக்க வேண்டும்
                                                                                   உனதருமை மகளாக ...!

--என்றென்றும் அப்பா உன் அன்பு நிழலில் அமைதியாய் இளைப்பாறும் உனதன்பு  தனா

No comments: