Showing posts with label kavidhaigal. Show all posts
Showing posts with label kavidhaigal. Show all posts

29 Aug 2011

என்னுடன் நான் மட்டும் ...


பிடித்து இழுக்கும் ஆக்சிஜனோ ... அடுக்கி வைத்த சுவாசப் பையில்
அனுமதியின்றி அலைந்து விட்டு ... சலவையாகி வெளியே வரக்
கவலையோடு காத்திருக்கும் உறுப்புகள் ஒவ்வொன்றின்
உளறல் சத்தமும் ... உள்ளிருந்து தெளிவாய்க் கேட்க ...
இதயம் எழுப்பும் ... இசை ஒலிகள் எல்லாம்
மூளைத் தட்டின் ... முக்கியப் பகுதியில்
தாள வடிவில் ... தான் ஒலிப் பதிவாகி
மீளக் கிடைக்கின்றன ... செவிப்பறையின் பக்கத்தில்
இதழ் நீட்டும் புன்னகையும் ... கண் சுருக்கும் கண்ணீரும்
தொண்டைக் குழிச் சுவரெல்லாம் ... தொட்டு விட்ட வார்த்தைகளும்
எவ்விதத் தடையுமின்றி ... எப்போதும் சுதந்திரமாய்
எழுத எண்ணிய எழுத்துக்களும் ... எழுதி முடித்த வாக்கியமும்
நினைத்த இடத்தில் நிறைவடைய ... நிறுத்தி வைத்தப் புள்ளிகளும்
இன்னமும் இயல்பாக்க இட்டு வைத்த எதுகையும் மோனையும்
அனைத்துமே என் படைப்பாய் ... அதற்கெல்லாம் பதிப்புரிமை எனக்கே எனக்காய்
என்னுடைய ஆளுகையில் ... எதுவும் நானாகி
எங்கேயும் இருக்கும் ரேகையும் கால் தடமும் எனதேயாகி
கனவுகளும் கற்பனையும் கைக்குலுக்கிக் கண்முன்னே
நனவாக நடை பயில ... ஓட்டப் பந்தயத்தில் ஓடுகின்ற எண்ணங்களும் 
எப்போதும் சாத்தியம் ... என்னுடன் நான் மட்டும் இருக்கையிலே ...

2 Aug 2011

விடைகள் தேடுகிறேன் ...

அப்போது அடைந்த துன்பம் ...இப்போது இல்லை ...
இப்போதைய இன்பமும் ... நிரந்தரமில்லை ...
விடையைத் தேடுகிறேன் ... கேள்வி இதுதான் ...
வாழ்க்கை என்பது இதுதான் இல்லையா ...?

உண்மையென நினைப்பது ... உண்மையிலேயே இல்லை ...
பொய்யெனப் புரியும் போது பொறுப்பதும் இல்லை ...
விடையைத் தேடுகிறேன் ... கேள்வி இதுதான் ...
வாழ்க்கை என்பது இதுதான் இல்லையா ...?

அடைய நினைப்பதை ... அடைந்தது இல்லை ...
அடைந்த ஒன்றை ... நினைப்பது இல்லை ...
விடையைத் தேடுகிறேன் ... கேள்வி இதுதான் ...
வாழ்க்கை என்பது இதுதான் இல்லையா ...?

அதிலும் இல்லை ... இதிலும் இல்லை ...
அங்கும் இங்கும் ... எதிலும் இல்லை ...
விடையைத் தேடுகிறேன் ... கேள்வி இதுதான் ...
மனம்  என்பது இதுதான் இல்லையா ...?

புரியாதது என்னவென்று ... புரியவில்லை ...
புரிந்திருப்பதால் மட்டும் ... பயன் ஒன்றும் இல்லை ...
விடையைத் தேடுகிறேன் ... கேள்வி இதுதான் ...
மனம்  என்பது இதுதான் இல்லையா ...?

யாரோ சொல்லக் கேட்கவும் இல்லை ...
தான் சொல்வதை எல்லாம் செய்வதும் இல்லை ...
விடையைத் தேடுகிறேன் ... கேள்வி இதுதான் ...
மனம்  என்பது இதுதான் இல்லையா ...?

வேண்டாம் என்றால் ... விடுவதில்லை ...
வேண்டியது என்னவெனத் ... தெரியவும் இல்லை ...
விடையைத் தேடுகிறேன் ... கேள்வி இதுதான் ...
மனம்  என்பது இதுதான் இல்லையா ...?

தேடித் தேடித் ... தெரிந்தும் விட்டது ...
தேடல்கள் மட்டும் ... என்றுமே முடிவது இல்லை என்று...!

26 Jul 2011

என்னைத் தொடக்கியவருக்கு ...

நா இது என்னோட அப்பாவ நெனச்சு எழுதுன கவித...எல்லாருக்குமே அப்பா ரொம்ப பெரிய விஷயம்... முன் மாதிரி ....எனக்கும் எங்க அப்பாஅப்டிதான்...இன்னிக்கு வரைக்கும் எந்த வித சோர்வும் இல்லாம என்ன தாங்குற என் அப்பாவுக்காக நா செய்ற சின்ன விஷயம் இந்த கவித ... Dedicated to my dad...love u pa...!


கண் மூடிக் கனவு கண்டு ...கண்டவுடன் கண் நனைத்துக்
கையிலெடுத்துக் ... கட்டியணைத்துக்
கண்மணி எனக் காதருகே
கத்தி முடி குறுகுறுக்கக் கண் திறந்து பார்க்கிறேன்
தூளியிலே நான் கிடக்க ... தூரத்திலே நீ இருக்க
ஆழியதன் முத்தெனவே ... அதிசயத்து நின்றிருக்க
விழி விரித்து வீசிய விந்தைச் சிரிப்பழகை ... கன்னக்
குழி நிறையக் குறையாப் புன்னகையுடன் ... உச்சி
முகர்ந்தென்னை முத்தமிட்டவன் நீ ...!

தத்தித் தத்தி நடை பழக ... தடுக்கித் தடுக்கித் தரையில் விழ
தாவி வந்தென்னைத் தன்னுடன் தான் அணைத்து
தட்டி விழுந்த தழும்புக்கெல்லாம் ... தடவித் தந்து தாலாட்டி
தன்னை மறந்து என்னுடனே உறங்கிப்போனவன் நீ ...!

இரவுத் தூக்கத்தை ....இன்னமும் இனிமையாக்க
இனிக்க இனிக்க ... இலக்கியம் பேசி
இன்னமும் எனக்கொரு  முன்னோடிஎன நடப்பவன் நீ...! 

வழுக்கி விழும் போதெல்லாம் ...வந்து நின்று வழி காட்டி
விழி  அழும் போதெல்லாம் வேண்டாமென்று துடைத்து விட்டு
அழியாத கனவாக ... அழகாக  நானிருக்க...
வழியெல்லாம் வலியோடு எனக்காக  எழிலிழந்து எதையும் ஏற்றவன் நீ...!

கண்ணாடி முன் நின்று நீ உனைப் பார்க்கும் போதெல்லாம்
முகத்தின் முன்னாடி உள்ளச் சுருக்கங்கள் எனைப் பார்த்து
                                                        சூசகமாய் சொல்கிறது
என்னடி ... பார்க்கிறாய் ... நாங்களெல்லாம்
உனக்காகத்தான் உருவாகினோம் என்று ...!

உடையவன் ஒருவனும் உன்னைப்போல் உள்ளத்தால் உயர்ந்திருக்க
அடையாதது ஒன்றுமில்லை... அர்த்தம் பெற்றுவிடும்
அத்தனையும் என் வாழ்வில் !!!

தடை ஏதுமில்லைத் தகப்பனே உன்னை தரிசிக்க
விடை ஏதுமில்லை ...விரும்பி நீ எனக்களிக்க
அத்தனையும் தந்து விட்டாய் ... அன்பொழுக எனைத் தழுவி
இத்தனை தானா நீ எனக்கு ...?
இல்லையில்லை ... இன்னமும் இருக்கிறது ...
இறைக்க இறைக்கக் குறையாது ...

எத்தனையோ எனக்குச் செய்த நீ ... என் வழி
அத்தனையும் என் முன் நடக்க வேண்டும்  ...
பித்தனைப்போல் என்னையே நினைத்துக்கொண்டிருக்கும்
உன்னையே சித்தமென்றிருக்க ... இனி வரும்
அத்தனைப் பிறவியிலும் ...உனக்கே நான் பிறக்க வேண்டும்
                                                                                   உனதருமை மகளாக ...!

--என்றென்றும் அப்பா உன் அன்பு நிழலில் அமைதியாய் இளைப்பாறும் உனதன்பு  தனா

20 Jul 2011

கனவில் என்னைக் கண்ட தேவதைக்கு ...


கனவுகளுக்கோ வண்ணமில்லை என்பர் ...
ஏனோ ... நீ என்னைக் கண்ட கனவுக்கு மட்டும் கண்ணே
வண்ணம் பூசிப் பார்த்திருக்க பரவசத்திர்கோர் பஞ்சமில்லை ...!
நீயோ...நெஞ்சமெங்கும் அன்பொழுக எழுதிப்பார்த்த உயிரோவியமானதால் ...
உனக்கென வண்ணங்களைத் தேடுவதில் மட்டுமே கழிக்கிறேன் என் வாரங்களை எல்லாம்...
வரமாக வந்து நீ தந்த வார்த்தைகளை எல்லாம் வரிசையாய்க் கோர்த்து
வாகயைச் சூட்டி விட்டேன் ...உன்னையும் என் சுவாசமாய் ஆக்கி விட்டேன் ...
இனிக்கும் உன் இதழோரம் இயம்பிய புன்னகை எல்லாம்
இன்றைக்கும் இருக்குதடி என் இன்றியமயாதவைப்  பட்டியலில் ...
கனவில் என்னைச் சுமந்த கண்களின் கரையோரக் கரும் மையில்
காலமெல்லாம் கரைந்திருக்க காதலோடு காத்திருக்கிறேன் ...
சத்தமின்றி சாத்திய இமைக்கடையில் வழியும் நீரின் துளி சொல்கிறது ...
இதுவும் நேசத்தின் நிஜமானதொரு பகுதியென்று ...
நித்தமும் கேட்கத் துடிக்கும் உன் உச்சரிப்பின் ஓசையோ பட்டென சாத்துகிறது
இதென்னவோ வெறும் நட்பு மட்டுமே என்று ...
இதற்கிடையில் இன்னலின் இருப்பிடமாய் ஆன என் இதயத்துக்கு
உன் மின்னல் விழிகள் விட்டு விட்டுப்போகும் விடை என்னடி ...???
விருப்பமரிய விழி பார்த்து   வியந்து நிற்கும் உனது அன்பன்

9 May 2011

முதல் கவிதை

 என் ஒவ்வொரு தேடலிலும் ...
        தொடக்கமும்....இறுதியும்...நீயாகவே இருக்கின்றாய்...!
             நான் நானாக இருக்க முயன்றாலும் 

                       நானும் நீயாகவே இருக்கின்றாய்..!!

16 Feb 2011

நட்புக்காலங்கள்

பள்ளி முடிந்தபின்னும்
வீடு திரும்பாமல்
நண்பர்களுடன்
மாலை ஆறுமணிவரை
வியர்க்க வியர்க்க
ஓடிப்பிடித்து விளையாடியபோது வியர்வயைவிட
அதிகமானது நட்பு.
கல்லூரியில் சேர்ந்தபின்
வீடுதிரும்ப தாமதமானால்
நண்பன் வீட்டில் நானும் ஒரு பிள்ளையாய்
தங்கியபோது பாசத்தைவிட
உயர்ந்தது நட்பு.
வேலை தேடி
அலையும் போது ஒன்றாய்
நேர்முகத்தேர்வுக்கு
சென்று,கிடைக்காத
வேலையைத் திட்டிக்கொண்டே
தோழர்களுடன் சினிமா
சென்றபோது
சுமைதாங்கியானது நட்பு.
வேலைகிடைத்து ஒவ்வொருவரும்
வேறு வேறு ஊர்களுக்கு
சென்றுவிட்டபின்
வாரம் ஒருமுறை அனுப்பும்
இருவரி ஈ-மெயிலிலும்,
நண்பர்களுக்குள் கொடுக்கும்
missed callலுமாக
மாறிப்போனது இன்றைய நட்பு...!

12 Feb 2011

கவிதைகள் - படித்ததில் பிடித்தவை

நாம நிறைய கவிதைகள கடந்து வந்துருப்போம் ... ஏன் நம்ம எப்பவும் அன்போட பாத்துக்குற நம்ம அம்மா கூட ஒரு கவிதை தான் ... அந்த கவிதைய பத்தி பேசுற இந்த நேரத்துல நான் வாசிச்சு ரசிச்ச சில கவிதைகள பகிர்ந்துக்க நினைக்கிறேன் ... சத்தியமா இதுல எதுவும் என் சொந்த படைப்பு இல்ல ... நான் படித்ததில் பிடித்தவை ...

-------------------------------------------------------------------------------------------------------------

மின்சாரத்துக்கும் வயதாகிவிட்டதோ... ஓல்(ட்)டேஜ் பிராப்ளம்!
---------------------------------------------------------------------------------------------------------------
இன்று அதிகாலை நடையில் முதன்முதலாகச் சந்தித்தோம் நானும் ஒரு பனித்துளியும்... 
---------------------------------------------------------------------------------------------------------------

                                                        பத்து பொருத்தமும்
                                                        சரி..!
                                                        ஆனாலும்
                                                         பெண் பிடிக்கவில்லை..!
                                                         சொத்து பொருத்தம் சரியில்லை..!
---------------------------------------------------------------------------------------------------------------

                                                         மன்னிப்பு என்பது...

                                                        மன்னிப்பு கேட்கும்படி
                                                       அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
                                                       மன்னிப்பு என்றால்
                                                       என்னவென்று கேட்கிறான்

                                                       ஒரு குழந்தைக்குப்
                                                       புரியவைக்க முடியுமா

                                                       மன்னிப்பு என்பது
                                                      ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
                                                     அதிகபட்ச தண்டனையென்று

                                                     அது வலிமையுள்ளவர்கள்
                                                     வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
                                                     அதிகாரம் என்று

                                                     வலிமையற்றவர்கள்
                                                     தமது இயலாமைக்குத்
                                                    தாமே வழங்கிக் கொள்ளும்
                                                     சமாதானமென்று

                                                     கடவுள்களின் ஓய்வு நேரப
                                                     பொழுது போக்கு என்று

                                                    பந்தயத்தில் தோற்ற குதிரையை
                                                   உயிரோடுவிடுவது என்று

                                                   மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
                                                  தூக்கு மேடையில் வழங்கப்படும்
                                                  கருணை என்று

                                                   ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
                                                   நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று

                                                  எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
                                                  சமூக உடன்படிக்கை என்று

                                                  கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
                                                  மறுகன்னத்தைக் காட்டுவது என்று

                                                  படுக்கையறையில்
                                                  மண்டியிடுதல் என்று

                                                  ஒரு இந்தியன் கண்டுபிடித்த
                                                   வினோத தத்துவம் என்று

                                                    பிரார்த்தனைகளின்
                                                    மையப் பொருள் என்று

                                                     ஒரு புரட்சியாளனால்
                                                    உதாசீனப்படுத்தப்படுவது என்று

                                                     இன்னொரு சந்தர்ப்பம்
                                                    அளிக்கும் முயற்சி என்று

                                                   இன்னொரு பக்கத்தைப்
                                                   புரிந்துகொள்வது என்று

                                                    தண்டனையை
                                                    ஒத்தி வைப்பது என்று

                                                    நண்பர்களுக்குத் தரும்
                                                    சிறந்த பரிசு என்று

                                                   ஒரு துரோகத்தை
                                                  அறியாததுபோல் நடிப்பது என்று

                                                  எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
                                                   கேட்கப்படுவது என்று

                                                  பெரும்பாலான சமயங்களில்
                                                  மறுக்கப்படுவது என்று

                                                   ஒருவரை அச்சத்திலிருந்து
                                                  விடுவிப்பது என்று

                                                   ஒருவரை நிரந்தரமாக
                                                 அடிமைப்படுத்துவது என்று

                                                 மறதியின்
                                                  இன்னொரு பெயர் என்று

                                                அடிக்கடி பயன்படுத்தப்படும்
                                                 ஒரு அர்த்தமற்ற சொல் என்று

                                                 மிகவும் எளிய
                                                ஒரு தந்திரமென்று

                                               ஒரு போதைப்பொருள்
                                                             என்று

                                                மன்னிக்கவே முடியாத ஒன்றை
                                                மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று

                                                 ஒரு குழந்தைக்குப்
                                                 புரியவைக்க முடியுமா

                                                  மன்னிப்பு என்பது
                                                 இறுதியில்
                                                 ஒரு கண்ணீ­ர்த்துளி
                                                  மட்டுமே என்று!
---------------------------------------------------------------------------------------------------------------

                                                   கோடுகளும் சித்திரங்களே

                                                               -வைரமுத்து

                                                                  என்
                                                                  பாதங்களுக்குக் கீழே
                                                                  பூக்கள் இல்லை
                                                                  மொய்த்துக் கிடந்தவை
                                                                  முட்களே.
                                                                   எனினும்
                                                                   ரத்தம் துடைத்து
                                                                   நடந்து வந்தேன்.
                                                                   என்னைத்
                                                                   தடவிச் சென்றது
                                                                   தெற்கே குளித்து வந்த
                                                                   தென்றல் அல்ல
                                                                    நுரையீரல்களை -
                                                                   கார்பன் தாள்களாய்க்
                                                                   கறுக்க வைக்கும்
                                                                   கந்தகக்காற்று
                                                                   இருந்தும்
                                                                   சுடச்சுடவே
                                                                   நான்
                                                                   சுவாசித்து வந்தேன்
                                                                  ஆண்டு முழுவதும் இருந்த
                                                                  அக்கினி நட்சத்திரத்தில்
                                                                  எரிந்து போயிற்று
                                                                  எனது குடை
                                                                 ஆயினும்
                                                                  என்
                                                                  நிழலின் நிழலிலேயே
                                                                  நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்
                                                                  என்
                                                                 தலைக்கு மேலே
                                                                 பருந்துகள் எப்போதும்
                                                                 பறந்துகொண்டிருந்ததால்
                                                                 நான் இன்னும்
                                                                 செத்துவிடவில்லை
                                                                 என்பதை
                                                                நித்தம் நித்தம்
                                                                நிருபிக்க வேண்டியதாயிற்று
                                                                என் நிர்வாணத்தை
                                                                ஒரு கையால்
                                                                மறைத்துக்கொண்டு
                                                                என்
                                                               அடுத்த கையால்
                                                               ஆடை நெய்து
                                                               அணிந்து கொண்டேன்
                                                               இன்று-
                                                               என்
                                                               பிரவாகம் கண்டு கரைகள்
                                                               பிரமிக்கலாம்
                                                              ஆனால் -
                                                              இந்த நதி
                                                              பாலைவனப் பாறைகளின்
                                                              இடுக்கில் கசிந்துதான்
                                                              இறங்கி வந்தது
                                                              தனது
                                                              சொந்தக் கண்ணீரும்
                                                              சுரந்ததால்
                                                              இரட்டிப்பானது
                                                              இந்த நதி
                                                              இந்த விதை
                                                              தன்மேல் கிடந்த
                                                              பாறைகளை
                                                              முட்டி முட்டியே
                                                              முளைத்துவிட்டது
                                                               இன்று என்
                                                               புண்களை மூடும்
                                                               பூக்களினால்
                                                               நான்
                                                               சமாதானம் அடைவது
                                                               சாத்தியமில்லை
                                                               இந்தச்
                                                               சமூக அமைப்பு
                                                               எனக்குச்
                                                                சம்மதமில்லை
                                                                சரிதம் என்பது
                                                                தனி ஒரு
                                                                மனிதனின்
                                                                அறிமுக அட்டையோ...?
                                                                அல்ல
                                                                அது
                                                                முடிவைத்தேடும்
                                                                ஒரு சமூகத்தின்
                                                                மொத்த விலாசம்
                                                                 இதுவோ...
                                                                 ரணத்தோடு வாசித்த
                                                                 சங்கீதம்...
                                                                எனது
                                                                 ஞாபக நீரோடையின்
                                                                  சலசலப்பு...
                                                                  நசுங்கிய
                                                                   நம்பிக்கைகளுக்கு
                                                                  என்
                                                                  பேனாவிலிருந்தொரு
                                                                   ரத்ததானம்
                                                                  இதில்
                                                                  சில நிஜங்களைச்
                                                                  சொல்லவில்லை என்பது
                                                                   நிஜம்.
                                                                  ஆனால் -
                                                                 சொன்னதெல்லாம் நிஜம்
                                                                  நான்
                                                                  வரைய நினைத்தது
                                                                  சித்திரம்தான்.
                                                                  வந்திரப்பவை
                                                                 கோடுகளே
                                                                  ஆனால் -
                                                                 கோடுகளும்
                                                                  சித்திரங்களே!
                                                                  மனித நேசம்தான்
                                                                  வாழ்க்கை என்பதை
                                                                  அறிய வந்தபோது
                                                                   என்
                                                                   முதுகில் கனக்கிறது
                                                                   முப்பது வயது.
---------------------------------------------------------------------------------------------------------------


                                                                   காத்திருப்பு


                                                                   நீ
                                                                   வந்தபின்
                                                                   உன்னுடன் பேசியதைவிட
                                                                   உனக்காக
                                                                    காத்திருக்கும் போது
                                                                    உன்னுடன் பேசியதுதான்
                                                                    அதிகம்
---------------------------------------------------------------------------------------------------------------

                                                                           கூக்குரல்

                                                                   அம்மா வரும்வரை-
                                                                    மரத்தை வெட்டாதீர்!
                                                                    கூக்குரல் இட்டது!
                                                                    குஞ்சுக் குருவி.
---------------------------------------------------------------------------------------------------------------

" நீ கனவா இல்லை கானல் நீரா ...???
என்றுதான் உன் உண்மை நிலையைக் காட்டுவாயோ....!!!
சில நேரங்களில் இதமளிக்கிறாய்...!
பல நேரங்களில் வாதம் புரிகிறாய் ... !!
உன் உதட்டோர புன்னகைக்காய் காத்திருந்து...
ஒவ்வொரு முறையும் மரணத்தையே தழுவுகின்றன என் எதிர்பார்ப்புகள்"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுதியவர்  யாரோ ...பெயர்  தெரியவில்லை ...சத்தியமா  என்  சொந்த    கவிதை  கிடையாது.I take no responsibility of this poetry...