நாம நிறைய கவிதைகள கடந்து வந்துருப்போம் ... ஏன் நம்ம எப்பவும் அன்போட பாத்துக்குற நம்ம அம்மா கூட ஒரு கவிதை தான் ... அந்த கவிதைய பத்தி பேசுற இந்த நேரத்துல நான் வாசிச்சு ரசிச்ச சில கவிதைகள பகிர்ந்துக்க நினைக்கிறேன் ... சத்தியமா இதுல எதுவும் என் சொந்த படைப்பு இல்ல ... நான் படித்ததில் பிடித்தவை ...
-------------------------------------------------------------------------------------------------------------
மின்சாரத்துக்கும் வயதாகிவிட்டதோ... ஓல்(ட்)டேஜ் பிராப்ளம்!
---------------------------------------------------------------------------------------------------------------
இன்று அதிகாலை நடையில் முதன்முதலாகச் சந்தித்தோம் நானும் ஒரு பனித்துளியும்...
---------------------------------------------------------------------------------------------------------------
பத்து பொருத்தமும்
சரி..!
ஆனாலும்
பெண் பிடிக்கவில்லை..!
சொத்து பொருத்தம் சரியில்லை..!
---------------------------------------------------------------------------------------------------------------
மன்னிப்பு என்பது...
மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று
அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று
வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று
கடவுள்களின் ஓய்வு நேரப
பொழுது போக்கு என்று
பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று
மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று
ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று
எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று
கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று
படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று
ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று
பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று
ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று
இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று
இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று
தண்டனையை
ஒத்தி வைப்பது என்று
நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று
ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று
எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று
பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று
ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று
ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று
மறதியின்
இன்னொரு பெயர் என்று
அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று
மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று
ஒரு போதைப்பொருள்
என்று
மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று
ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா
மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று!
---------------------------------------------------------------------------------------------------------------
கோடுகளும் சித்திரங்களே
-வைரமுத்து
என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.
என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்
ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்
என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று
என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்
இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது
தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி
இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது
இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை
சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்
இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்
இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்
நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!
மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.
---------------------------------------------------------------------------------------------------------------காத்திருப்பு
நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
உன்னுடன் பேசியதுதான்
அதிகம்
---------------------------------------------------------------------------------------------------------------கூக்குரல்
அம்மா வரும்வரை-
மரத்தை வெட்டாதீர்!
கூக்குரல் இட்டது!
குஞ்சுக் குருவி.
---------------------------------------------------------------------------------------------------------------" நீ கனவா இல்லை கானல் நீரா ...???
என்றுதான் உன் உண்மை நிலையைக் காட்டுவாயோ....!!!
சில நேரங்களில் இதமளிக்கிறாய்...!
பல நேரங்களில் வாதம் புரிகிறாய் ... !!
உன் உதட்டோர புன்னகைக்காய் காத்திருந்து...
ஒவ்வொரு முறையும் மரணத்தையே தழுவுகின்றன என் எதிர்பார்ப்புகள்"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுதியவர் யாரோ ...பெயர் தெரியவில்லை ...சத்தியமா என் சொந்த கவிதை கிடையாது.I take no responsibility of this poetry...
என்றுதான் உன் உண்மை நிலையைக் காட்டுவாயோ....!!!
சில நேரங்களில் இதமளிக்கிறாய்...!
பல நேரங்களில் வாதம் புரிகிறாய் ... !!
உன் உதட்டோர புன்னகைக்காய் காத்திருந்து...
ஒவ்வொரு முறையும் மரணத்தையே தழுவுகின்றன என் எதிர்பார்ப்புகள்"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
எழுதியவர் யாரோ ...பெயர் தெரியவில்லை ...சத்தியமா என் சொந்த கவிதை கிடையாது.I take no responsibility of this poetry...
No comments:
Post a Comment