29 Aug 2011

என்னுடன் நான் மட்டும் ...


பிடித்து இழுக்கும் ஆக்சிஜனோ ... அடுக்கி வைத்த சுவாசப் பையில்
அனுமதியின்றி அலைந்து விட்டு ... சலவையாகி வெளியே வரக்
கவலையோடு காத்திருக்கும் உறுப்புகள் ஒவ்வொன்றின்
உளறல் சத்தமும் ... உள்ளிருந்து தெளிவாய்க் கேட்க ...
இதயம் எழுப்பும் ... இசை ஒலிகள் எல்லாம்
மூளைத் தட்டின் ... முக்கியப் பகுதியில்
தாள வடிவில் ... தான் ஒலிப் பதிவாகி
மீளக் கிடைக்கின்றன ... செவிப்பறையின் பக்கத்தில்
இதழ் நீட்டும் புன்னகையும் ... கண் சுருக்கும் கண்ணீரும்
தொண்டைக் குழிச் சுவரெல்லாம் ... தொட்டு விட்ட வார்த்தைகளும்
எவ்விதத் தடையுமின்றி ... எப்போதும் சுதந்திரமாய்
எழுத எண்ணிய எழுத்துக்களும் ... எழுதி முடித்த வாக்கியமும்
நினைத்த இடத்தில் நிறைவடைய ... நிறுத்தி வைத்தப் புள்ளிகளும்
இன்னமும் இயல்பாக்க இட்டு வைத்த எதுகையும் மோனையும்
அனைத்துமே என் படைப்பாய் ... அதற்கெல்லாம் பதிப்புரிமை எனக்கே எனக்காய்
என்னுடைய ஆளுகையில் ... எதுவும் நானாகி
எங்கேயும் இருக்கும் ரேகையும் கால் தடமும் எனதேயாகி
கனவுகளும் கற்பனையும் கைக்குலுக்கிக் கண்முன்னே
நனவாக நடை பயில ... ஓட்டப் பந்தயத்தில் ஓடுகின்ற எண்ணங்களும் 
எப்போதும் சாத்தியம் ... என்னுடன் நான் மட்டும் இருக்கையிலே ...

No comments: